இந்தியாவின் முக்கிய உணவு அரிசி. அன்றாட உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாத மதிய உணவு இல்லை. குறிப்பாகத் தமிழ் நாட்டிலே அரிசிதான் பிரதான உணவு. அரிசியில் சோறு, இட்லி, தோசை, பொங்கல், ரவை, கிச்சடி, ஹெல்த் மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் என அனைத்திலும் அரிசி கலந்திருக்கும். அரிசியை அரைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த அரிசி மாவால் பலவகை உணவுகளைச் செய்ய முடியும். கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளும் முறுக்கு போன்ற நொறுக்கி தீனிகள்கூட செய்ய முடியும். இந்த அரிசி மாவு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது.
புரதம், மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வுத் தரும். குழந்தைகளின் வளர்ச்சிக்குகூட உதவும்.
கால்சியம், ஜின்க், நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன. உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்திட உதவுகிறது.
அலர்ஜி ஏற்படுத்தும் குளுட்டன் இதில் இல்லை. வயிற்றுக்கு நல்லது.
பசியின்மை பிரச்னையைக் குறைக்கும்.
எல்லாவற்றுக்கும் பயன்படுத்த கூடிய மாவாக இருக்கிறது.
கோதுமை மாவு ஒத்துகொள்ளாதவர்கள்கூட, அரிசி மாவைப் பயன்படுத்தலாம்.
அரிசி மாவு ரொட்டி
தேவையானவை
அரிசி மாவு – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
துருவிய கேரட் – 1
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
அரிசி மாவுடன் எண்ணெய், தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், கேரட், சீரகம், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுப் போல பிசைந்துகொள்ளவும். அதைச் சிறு உருண்டைகளாக்கி, தோசைக் கல்லின் மேல் அடை போன்று தட்டி எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டெடுக்கவும். சுடும்போது, ரொட்டியின் நடுவில் சிறு சிறு துளைகள் போடவும். ரொட்டி நன்றாக வேக உதவும். இதை சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்.
பலன்கள்
- குழந்தைகளுக்குகூட சாப்பிட கொடுக்கலாம். வயிற்றுக்கு நல்லது.
- காலை, இரவு உணவாகச் சாப்பிடலாம். செரிமானம் சீராகும்.
- வயிறு நிறையும்.
- தசை வளர்ச்சிக்கு உதவும்.
அரிசி மாவு புட்டு
தேவையானவை
அரிசி மாவு – 3 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை – சுவைக்கு ஏற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சிறிது உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மாவு சற்று ஈரமாக இருக்க வேண்டும். புட்டுக் குழலில் தேங்காய்த் துருவல் போட்டு அதன் மேல் மாவை நிரப்பி மீண்டும் தேங்காய்த் துருவல் சேர்த்து மூடியால் மூடி விடவும். அடிப்பகுதியில் உள்ள பாத்திரத்தில் நீர் நிரப்பி, புட்டை வேகவிடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை தூவி சாப்பிடலாம்.
பலன்கள்
- கால்சியம், மாவுச்சத்து, புரதம் நிறைந்தது.
- செரிமான செயல்பாடு சீராக நடக்கும்.
- எலும்புகளுக்கு நல்லது.
- மாதவிடாய் காலங்களில் பெண்களுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
- இடுப்பு எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
- பெண்கள் புட்டை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.