‘தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனச் சொல்வார்கள். வினையை அறுக்கிறோமோ இல்லையோ தினையைச் சாப்பிடுபவன் திடமாவான். தினையை சோறாக்கி மாவாக்கி உண்பவன் ஆரோக்கியமானவன் என்பதே உண்மை. இந்தியா, ஆஃப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் முக்கிய உணவாகத் தினை இருக்கிறது. ஹெல்த்தி டயட் பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படுவது தினை. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த நைவைத்தியம். தினை மாவும் பொடித்த வெல்லமும் கலந்து பிரசாதமாக தருவார்கள். அவ்வளவு சிறப்பு பெற்றது தினை. அதை நாமும் சாப்பிட்டால் பலன்களை எளிதில் பெறலாம்.
இதயத்துக்கு நல்லது
இதில் உள்ள வைட்டமின் பி1 தசைக்கும் நரம்புக்கும் நன்மையைச் செய்யும். கார்டியாக்கின் செயல்பாட்டை சீராக்கும். சீரற்ற செயல்பாடுகளை சரிப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு தினை நல்லது. தினை சோறு, தினை தோசை, தினை சேமியா எனத் தினையை எதாவது ஒருவகையில் சாப்பிடலாம்.
மறதியைப் போக்கும்
மறதி நோய் வருவதை வைட்டமின் பி1 சத்து தாமதப்படுத்தும். மேலும், நினைவாற்றலை மேம்படுத்தும். நரம்பு மண்டலத்தைப் பலமாக்கும்.
ஆன்டிஆக்ஸிடண்ட் அதிகம்
ஆன்டிஆக்ஸிடண்ட் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். சத்து இருப்பதால் சருமத்தில் சுருக்கங்கள், வயதாவதால் வரும் பிரச்னைகள் ஆகியவையும் தாமதமாகும்.
தசையை தளரவிடாது
தசைகளின் ஆரோக்கியத்துக்கு இரும்புச்சத்து முக்கியம். தசைக்கு தேவையான இரும்புச்சத்தை அளித்து அதன் ஆரோக்கியத்தைப் பராமரித்து அதன் தளர்வுதன்மையை இழக்க விடாமல் பாதுகாக்கிறது தினை. இதனால் தினை சாப்பிடுவோருக்கு ரத்தசோகையும் வராது.
மூளைக்கும் முக்கியம்
தினையில் உள்ள இரும்புச்சத்தால் ரத்த உற்பத்தி உடலில் அதிகரிக்கும். மூளைக்கு தேவையான 20% ஆக்சிஜனை ரத்தத்திலிருந்து பெறலாம். இதனால் ஆக்சிஜன் சீராக சென்று மூளைச் சிறப்பாக வேலை செய்யும்.
முடிக்கு தேவை புரதம்
புரதச்சத்து சரியாக இருந்தால் முடி உதிராது; சேதமடையாது. புரதச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் முடியைப் பாதுகாக்கலாம். தினை உணவுகளில் புரதம் இருப்பதால் தினை உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகளின் நண்பன்
ரத்தத்தில் சர்க்கரை அளவை 70% குறைப்பதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும், ட்ரைகிளசரைட் அளவைக் குறைப்பதால் கெட்ட கொழுப்பும் குறையும்.
பாரம்பரிய மருத்துவத்திலும் தினை
சீனாவில் டையாரியா பிரச்னைக்கு தினை சார்ந்த உணவுகளை மருந்தாக கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது.
சீரான சிறுநீர் பெருக்கத்துக்கும் தினை உதவுகிறது.
செரிமான கோளாறு வராமல் தடுக்கிறது.
காய்ச்சல், காலரா பிரச்னைக்கு தினை கஞ்சியைக் கொடுக்கிறார்கள்.
ரூமாட்டிஸம் எனும் சொல்லப்படும் எலும்புத் தொடர்பான பிரச்னைக்கும் தினை மருந்தாகிறது.
தயிருடன் தினை மாவு கலந்து கஞ்சியாக, கூழாகவோ குடித்து வர உடல் வெப்பம் தணியும். இதுபோன்ற மருத்துவ முறைகள் தினை உணவுகளால் பின்பற்றப்படுகிறது.
தினை உணவுகள் திடமானவை
தினையை வாரத்துக்கு மூன்று வேளையாவது சாப்பிடுங்கள். தினை உருண்டை, தினை அல்வா, தினை தோசை, தினை கஞ்சி, தினை சோறு, தினை சேமியா, தினைப் பொங்கல் எனத் தினையை சாப்பிட்டு வந்தால் பலன்கள் கிடைப்பது கண்கூடு.