பெயரில் மட்டும்தான் சர்க்கரை. ஆனால், இந்த நோய் வந்தால் சர்க்கரை பக்கமே தலைவைத்துப் படுக்க கூடாது என்பார்கள். ‘சர்க்கரை நோய் வந்தால் அவ்வளவுதான்… இனி மாத்திரை, இன்சுலினை நம்பியே இருக்க வேண்டும்’ என்ற தவறான கருத்துகளும் பரவியுள்ளன. நோயின் தீவிரம், நோயாளியின் உடல்நலம், மனநலம் மற்றும் அவரது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் வைத்துதான் இதைத் தீர்மானிக்க முடியும். கேட்டவர், தெரிந்தவர், அனுபவித்தவர் எனப் பேச்சால் வரும் கருத்துகளை நம்பி யாரும் அச்சப்படவேண்டியது இல்லை.
பெரும்பாலானோர் நோயை உணவிலே குணப்படுத்த முடியுமா என்று கேட்பார்கள். முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி பிரச்னை இல்லாமல் வாழ்ந்திட முடியும். துரித உணவுகள், உடல்நல பிரச்னைகளின் ஆரம்பம் எனச் சொல்லலாம். நல்ல உணவே நோய்களுக்கான மருந்து. நன்மை தரும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சிறந்த வழி.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் நல்ல உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதை முறையாக பின்பற்றினால் மாத்திரை, ஊசி இல்லாமலே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள் என்னென்ன எனப் பார்க்கலாம்.
தினை
சிறுதானியங்களில் ஒரு வகைத் தினை. நார்ச்சத்துகளும் புரதமும் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் டயட் இந்தத் தினை. வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால் அதிகமாக சாப்பிடும் உந்துதல் இருக்காது. ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் தினை சிறந்தது. தினை சோறு, தினை பருப்பு சாம்பார், தினை கஞ்சி, தினை பொங்கல், தினை சேமியா, தினை அவல், தினை உருண்டை, தினை புட்டு, தினை தோசை எனத் தினை மாவை வைத்து செய்யகூடிய உணவுகளை, வாரத்துக்கு மூன்று முறையாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது.
கோதுமை
சர்க்கரை நோயாளிகள், மாவுச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடவே கூடாது என்பது இல்லை. அளவாக எதைச் சாப்பிட்டாலும் பிரச்னை இல்லை. மாவுச்சத்தில் இரண்டு வகை உண்டு. சிம்பிள் மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்ப்ஸ். இதில் காம்ப்ளெக்ஸ் கார்ப்ஸ் நன்மையைச் செய்யக் கூடியவை. கோதுமை, சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி ஆகிய உணவுகளில் இது இருக்கும். இதை அளவாக சாப்பிடும்போது நன்மையை அளிக்கும். கோதுமை தோசை, சப்பாத்தி, கோதுமையால் தயாரிக்கப்படும் சம்பா ரவை உப்புமா, கோதுமை சேமியா ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.
வரகு
உணவு சாப்பிட்டு சில மணி நேரங்களில் வேகமாக ரத்தத்தில் சர்க்கரை சேராமல் மெதுவாக சேரும் உணவு, வரகு. வரகு பொங்கல், வரகு கஞ்சி, வரகு உப்புமா, வரகு சேமியா, வரகு பிரியாணி, வரகால் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவு. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், அனைவரும் சாப்பிட ஏற்றது. வாரம் நான்கு முறையாவது வரகரிசியால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
கேழ்வரகு/ராகி
கேழ்வரகில் பைடோகெமிக்கல்ஸ் இருப்பதால் மெதுவாக செரிமானமாகும். இதனால் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை சேராமல் சிறிது சிறிதாக மெதுவாக சேரும். இதனால் சர்க்கரை சேரும் பிரச்னை தடுக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளின் நண்பன், கேழ்வரகு எனச் சொல்லலாம். அரிசி மற்றும் கோதுமையைவிட கேழ்வரகில் அதிக நார்ச்சத்துகள் உள்ளன. மேலும் இதில் கிளைசமிக் அளவும் குறைவுதான். முளைகட்டிய கேழ்வரகை மாவாக அரைத்து, அதில் கேழ்வரகு தோசை, அடை, களி, கூழ் என செய்து சாப்பிடலாம். மேலும் ராகி மாவால் எளிமையாக செய்யகூடிய ராகி சேமியா, ராகி புட்டு, ராகி சத்துருண்டைகளைச் சாப்பிடுங்கள்.
சோளம்
வரகு, கேழ்வரகு போல சோளமும் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையைச் செய்யும். மேலும் இது, குளுட்டன் இல்லாதது, ஆன்டிஆக்ஸிடன்ஸ் நிறைந்தது. இதனால், வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், இதயம் தொடர்பான நோய்கள் வராமலும் தடுக்கும். சோளத்தால் செய்த சப்பாத்தி, தோசை, அடை, உப்புமா, சோள சோறு, சோளம் சேமியா ஆகியவற்றைச் வாரம் இருமுறையாவது தொடர்ந்து எடுத்துகொள்வது நல்லது.
பீன்ஸ், பயறு – பருப்பு வகைகள்
நார்ச்சத்துகள் அதிகம்; கொழுப்பு குறைவு. ரத்தத்தில் கொழுப்பை குறைக்கும். அதுபோல, நார்ச்சத்து இவற்றில் இருப்பதால் ரத்தத்தில் சேரும் அதிக சர்க்கரையைத் தடுக்கும். வாரம் மூன்று முறையாவது ஒரு கப் அளவுக்கு இதைச் சாப்பிட வேண்டும். புரதம் அதிகம் இருக்கும் உணவு இவை என்பதால், டயாபடிக் டயட்டில் முக்கிய இடத்தில் இருக்கிறது. சூப், சாலட், சுண்டல் வகைகள் என ஒரு கப் அளவுக்கு வாரம் மூன்று முறை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டாம் என்ற பழமொழி நமக்கு தெரிந்திருக்கும். அது உண்மைதான். நான்கு வாரத்துக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டாலே 40% கெட்ட கொழுப்பு குறையும். அதனால் நீங்கள் கார்டியாலஜிஸ்டிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. அதுபோல வாரத்துக்கு 5 அல்லது 6 ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 23% குறைகிறது என்கிறது ஹார்வார்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்.
வெந்தயம்
வெந்தயத்தைப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடியை இளஞ்சூடான நீரில் கலந்து காலையில் எழுந்ததும் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடலில் உள்ள மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றை உறிஞ்சும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு. வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டாலும் பலன்கள் கிடைக்கும். வெந்தயத் தோசை, வெந்தயச் சிறுதானிய களி, வெந்தயச் சிறுதானிய சேமியா கஞ்சி எனச் சாப்பிட்டு வருவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
இதனுடன் மருத்துவரின் ஆலோசனையும் தேவையான அளவு உடலுழைப்பும் சரியான உணவுப் பழக்கமும் இருந்தால் எளிதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.