சோள முத்துக்கள் வெறும் முத்துக்கள் அல்ல. அவை அனைத்தும் சத்துகள் நிறைந்த முத்துக்கள். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சோளம் வெகு பிரபலம். சிறுதானிய குடும்பங்களில் சோளமும் ஒன்று. உலகில் ஐந்து சத்துள்ள தானியங்களில் சோளமும் ஒரு வகை. முன்பெல்லாம் விலங்குகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். பிறகு சோளம் மனிதர்களின் தட்டிலும் இடம் பிடித்துவிட்டது. அரிசி, கோதுமையைச் சாப்பிட விரும்பாதவர்கள், சோளத்தைச் சாப்பிடலாம். அவற்றைவிட சோளத்தில் சத்துகளும் அதிகம். இதில் குளுட்டன் சிறிதும் இல்லை. சோளம் ஆரோக்கியத்தின் அடையாளம்.
கோதுமை, பார்லி உணவுகளில் இருக்கும் குளூட்டன் செரிமான பிரச்னை, வாயுத் தொல்லைகள், வயிறு வலி, வயிற்றுப் பிடிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால் சோளம் போன்ற சிறுதானியங்களில் குளுட்டன் சிறிதும் இல்லை. அனைவரும் சாப்பிட ஏற்றது.
செல்கள் உருவாக, சீராக வேலை செய்ய புரதம் தேவை. ஒரு கப் சோளத்தில் 22 கிராம் புரதம் உள்ளது.
ஒவ்வொரு கப்பிலும் 8.45 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையினர் சாப்பிட ஏற்றது.
இதில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்ப்ஸ், உணவை மெதுவாக செரிக்கும்தன்மை உடையது. இதனால் சாப்பிட்டவுடன் சர்க்கரை ரத்தத்தில் மெதுவாக சேரும்.
மெக்னிசியம் அதிகம் உள்ளதால், சோளம் சாப்பிடுவோருக்கு கால்சியம் உறிஞ்சும்தன்மை உடலில் அதிகரிக்கும். இதனால் எலும்புகள் உறுதியாகும்.
சோளத்தில் 3- Deoxyanthocyanidins என்ற கெமிக்கல் கலவை (சத்து) இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும் தன்மைஉடையது. குறிப்பாக சரும புற்றுநோயில் ஒரு வகையான மெலொனோமா செல்களை அழிக்கும் வல்லமை பெற்றது.
இதில் உள்ள பாஸ்பரஸ் சத்து, எலும்புகளின் வளர்ச்சிக்கும் எலும்புகளின் அடர்த்திக் குறைந்து சேதமானால் அதைத் தரமாக்குவதற்கும் பாஸ்பரஸ் சத்து தேவை. அது சோளத்தில் நிறையவே உள்ளது.
நியாசின், வைட்டமின் பி3 இருப்பதால் உணவு எனர்ஜியாக மாற உதவும். ஒருநாளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். காலை உணவாக சோளத்தைச் சாப்பிடும்போது எனர்ஜி பூஸ்டராக அமையும்.
உடலுக்குத் தேவையான நார்ச்சத்து இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து உடலுக்கு நன்மை செய்வதால் மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த நோய்கள் வராது.
அடிக்கடி சோளத்தை ஏதாவது ஒரு வகையில் உணவாக செய்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சோளத்தை ஊறவைத்து உளுந்து சேர்த்து அரைத்து சோள இட்லி, சோள தோசையாக சாப்பிடலாம். சோள மாவில் தயாரித்த சோள சேமியா, சோள சப்பாத்தி, சோள அடை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
ஒரு கப் சோளத்தில்
கலோரிகள் – 651 kcal
மாவுச்சத்து – 143 g
புரதம் – 22 g
நார்ச்சத்து – 12 g
கொழுப்பு – 6.3 g
மெக்னிசியம் – 316.8 mg
பாஸ்பரஸ் – 551 mg
பொட்டாசியம் – 672 mg
கால்சியம் – 53.8 mg
இரும்புச்சத்து – 8.5 mg